உக்ரைன்-ரஷ்யா இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. இதன் காரணமாக தனது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தி கொள்வதற்கு நேட்டோ நாடுகள் அமைப்பில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில் 1.50 லட்சம் ராணுவ வீரர்களை குவித்தது. இதற்கு அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில் உலக நாடுகள் எதிர்பார்த்தது போலவே உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய ராணுவத்துக்கு அதிபர் புடின் அதிரடியாக உத்தரவிட்டார்.
இதையடுத்து எங்கு பார்த்தாலும் குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டு வருகிறது. ராணுவ தளங்கள், விமான நிலையங்கள், கட்டிடங்கள் போன்றவை ஏவுகணைகளின் தாக்குதலில் பற்றி எரிந்து வருகின்றன. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடி செல்கின்றனர். மேலும் குண்டுவீச்சில் குடியிருப்புகள் பலத்த சேதமடைந்துள்ளன. தற்போது ரஷ்ய படை வீரர்கள் உக்ரைனை 3 திசைகளிலும் சுற்றிவளைத்து தலைநகர் கீவ்வை ஆக்கிரமிக்க கடும் யுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் உக்ரைனில் தவித்த இந்திய மாணவர்களை மீட்க சென்ற “ஏர் இந்தியா” விமானம் ருமேனிய விமான நிலையத்தை அடைந்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தின் இந்த A1-1943 விமானம் 256 பயணிகளை ஏற்றிச்செல்லும் திறன் கொண்டது. இந்த விமானம் டெல்லியில் இருந்து சென்றுள்ள நிலையில், மற்றொரு விமானம் மும்பையில் இருந்து புறப்பட உள்ளது.