கள்ளக்குறிச்சியில் மணிமுக்தா அணை உள்ளது. 36 அடி கொள்ளளவு கொண்ட அணையில், தற்போது 30.60 அடி நீர் கொள்ளளவை எட்டியுள்ளது. அதனால், பாசனத்துக்கு தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கைவிடுத்தனர். இதனையேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரன்குராலா, பாசனத்திற்கான தண்ணீரை, ஷட்டரை இயக்கி திறந்துவைத்தார்.
இன்றுமுதல் 33 நாள்களுக்கு பழைய பாசன ஆற்றுவாய்க்காலில் 15 கனஅடி நீரும், புதிய பாசன வாய்க்காலில் 60 கனஅடி நீரும் மொத்தம் 75 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 8முதல் 25ஆம் தேதிவரை அடுத்த 18 நாள்களுக்கு 62 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. இதன்மூலம் அகரகோட்டலம், அனைகரைகோட்டாலம், வாணியந்தல், தண்டலை, பெருவங்கூர், வீரசோழபுரம், மாடூர், நீலமங்கலம், நிறைமதி, குரூர், பல்லகச்சேரி, சூளாங்குறிச்சி, சித்தலூர், உடைய நாச்சி, கூத்தக்குடி ஆகிய 15 கிராமங்களில் உள்ள 5 ஆயிரத்து 493 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற இருக்கிறது.