உக்ரைன் மீது படையெடுத்து வரும் ரஷ்யாவை உலக நாடுகள் கடுமையாக எதிர்த்து வரும் நிலையில் உலகெங்கும் போராட்டம் அதிகரித்திருக்கிறது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த வியாழக்கிழமை அன்று படையெடுக்கத் தொடங்கியது. தரைவழி, வான்வழி மற்றும் கடல் வழி என்று தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. ராணுவ நிலைகளை மட்டும் தான் தாக்குவதாக கூறிய ரசியா, தற்போது குடியிருப்பு பகுதிகளிலும் பயங்கர தாக்குதல் நடத்துகிறது.
இதனால் உலக நாடுகள் அனைத்தும் உக்ரைன் நாட்டின் மக்கள் மீது வருத்தம் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ரஷ்யாவை எதிர்த்தும் உக்ரைன் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் உலகெங்கும் போராட்டம் அதிகரித்திருக்கிறது. தலைநகர் மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் போன்ற நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் சாலைகளில் குவிந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.
போராட்டக்காரர்கள், “உக்ரைன் மக்களுடன் ஒற்றுமை பாராட்டுவோம்” ,”போர் வேண்டாம்”, “உலக அமைதி வேண்டும்” ஆகிய பதாகைகளை ஏந்திகொண்டு கோஷங்கள் எழுப்பி வருகிறார்கள். அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகளில் ரஷ்ய தூதரகங்களின் முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புகழ்பெற்ற நியூயார்க் டைம்ஸ் சதுக்கம், இங்கிலாந்து தலைநகர் லண்டன், பிரான்ஸ் தலைநகர் பாரீஸ், ஸ்பெயின் தலைநகர் மாட்ரீட், நெதர்லாந்தின் தலைநகர் திஹேக் மற்றும் சுவிட்சர்லாந்தின் தலைநகரான ஜெனிவா, ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோ, துருக்கியின் இஸ்தான்புல் மற்றும் அயர்லாந்தின் தலைநகரான டப்லின் போன்ற பகுதிகளில் மக்கள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.