சிறுவனை அடித்து துன்புறுத்திய குற்றத்திற்காக தந்தை கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மதுக்கரை அறிவொளி நகரில் சாதிக்பாஷா-ரெஜினா பானு என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதில் மூத்த மகன் ரெஜினா பானுடனும் இளைய மகன் சாதிக்பாஷாவுடனும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சாதிக்பாஷா தினமும் மது அருந்திவிட்டு தனது மகனை மிகவும் கொடூரமான முறையில் தாக்கி வந்துள்ளார். இதனைப் பார்த்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சாதிக்பாஷாவை கைது செய்துள்ளனர். இதன்பிறகு தனியாக இருந்த 5 வயது சிறுவனை தாய் ரெஜினா பானுவிடம் ஒப்படைத்துள்ளனர். அதன்பிறகு வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சாதிக்பாஷா தினமும் மது போதையில் வந்து மகனை துன்புறுத்துவதாக அக்கம்பக்கத்தில் வசிக்கும் மக்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் சாதிக்பாஷாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.