இன்ஸ்பெக்டர் மனைவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை,பூந்தமல்லி ராமாபுரத்தில் உள்ள வெங்கடேஸ்வரா நகரில் வசித்து வரும் வினோதன் (52) ஆவடியில் இருக்கும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை பாட்டாலியின் பிரிவு 5 ல் இன்ஸ்பெக்டர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவர் மனைவி தீபா(48). இந்த தம்பதியருக்கு விஜய் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளார். கடந்த சில நாட்களாகவே குடும்பத்தின் பிரச்சினை காரணமாக தீபா மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் விஜய் தன் தங்கையை பள்ளியிலிருந்து அழைத்து வீட்டிற்கு வந்தபோது வீட்டின் படுக்கை அறையின் கதவு உள்ப்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த விஜய் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தீபா குளியலறையில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார்.
இதை அடுத்து விஜய் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் ராமாபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு தீபாவை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் தீபா முன்னரே இறந்ததாக கூறியுள்ளனர். பின் பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தற்கொலையா? வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா என்று ராயலா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.