மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், வருவாய் துறை ஆய்வாளர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் கோவை வடக்கு தாலுகாவில் பணிபுரியும் துணை தாசில்தார் பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து வருவாய்துறை ஆய்வாளர்களுக்கு தேவையில்லாமல் நோட்டீஸ் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் எனவும், கோவை விருந்தினர் மாளிகையில் தங்கும் முக்கிய நபர்களின் செலவை மாவட்ட நிர்வாகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளனர். மேலும் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் தான் வேலை பார்ப்போம் இல்லையெனில் கோரிக்கைகள் நிறைவேறும் வரை காத்திருப்பு மற்றும் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என கூறியுள்ளனர்.