அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற அமைப்பினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பாக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு ஓய்வு பெற்ற நல அமைப்பின் தலைவர் பழமலை தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பென்சன் திட்டத்தை அரசு ஏற்றுக்கொண்டு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் எனவும், குடும்ப பாதுகாப்பு நிதியாக 50000 ரூபாய் தர வேண்டும்.
மேலும் மருத்துவ காப்பீடு திட்டம் வழங்க வேண்டுமெனவும், மருத்துவப்படியை 300 ரூபாயாக உயர்த்த வேண்டுமெனவும், கடந்த 2015-ம் ஆண்டிலிருந்து 2022-ம் ஆண்டு வரை தரவேண்டிய மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையை தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர். இந்த போராட்டத்தில் மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் பக்தவச்சலம், கணேசன், வேணுகோபால், பலராமன், கலியமூர்த்தி, சின்னராசு, சேஷயன் உள்பட 800 பேர் கலந்து கொண்டுள்ளனர்.