தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி வாயிலாக நடத்தப்படும் போட்டி தேர்வுகளான குரூப்1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகள் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 2 ஆண்டுகள் வெளியாகவில்லை. தற்போது கொரோனா தொற்று கணிசமாக குறைந்து வரும் நிலையில் போட்டி தேர்வு அறிவிப்புகள் வெளியாகின்றன. அந்த அடிப்படையில் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இத்தேர்வு மூலம் 5,831 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன. இந்த தேர்வுக்கான புதிய பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருப்பதால், அதன்படி தேர்வர்கள் தயாராகி வருகின்றனர்.
இதையடுத்து இந்த போட்டி தேர்வுகளுக்கு அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். இந்த பயிற்சி வகுப்புகள் மூலமாக ஏழை, எளிய தேர்வர்கள் பயன் பெற்று வருகின்றனர். மேலும் இப்பயிற்சி வாயிலாக பலர் தேர்வில் தேர்ச்சி பெற்று வருகின்றனர். அந்த அடிப்படையில் தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னாா்வப் பயிலும் வட்டத்தின் மூலமாக குரூப்-2, 2A தோ்வர்களுக்கு மாா்ச் 1-ஆம் தேதி (முற்பகல் 11 மணிக்கு) முதல் அங்குள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வைத்து இலவசமாக பயிற்சி நடத்தப்பட இருப்பதாக மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்த இலவச பயிற்சி வகுப்புகள் அனுபவம் மிக்க சிறப்பு வல்லுநா்களைக் கொண்டு நடத்தப்படுவதுடன், பாடக் குறிப்புகள் வழங்கப்பட்டு மாதிரித் தோ்வுகளும் நடத்தப்படவுள்ளன. அதனை தொடர்ந்து முன்பு பயிற்சி பெற்ற மாணவா்களுக்காக மாதிரித் தோ்வு வகுப்புகள் தனியே நடத்தப்படவுள்ளன. ஆகவே தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த போட்டித் தோ்வுக்குத் தயாராகி வரும் இளைஞா்கள், தங்களது பெயா் மற்றும் கல்வித்தகுதியைக் குறிப்பிட்டு 8110919990 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தகவல் அனுப்பிப் பதிவு செய்து கொள்ளலாம். இது தொடர்பான மேலும் விபரங்களுக்கு 04362 – 237037 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.