உக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் தன் மகனை மீட்டுத் தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு தாய் கோரிக்கை வைத்துள்ளார்.
திருச்சி டோல்கேட் திருவள்ளூர் அவென்யூ பகுதியில் வசித்து வரும் சேவியர்-மேகலா வின் மகன் சந்தோஷ் சுசிர் லாட்டிமர் (23) என்பவர் உக்ரைன் நாட்டில் பி .இ. இறுதி ஆண்டு படித்து வருகிறார். உக்ரைன் நாட்டில் ரஷ்யா நுழைந்து தாக்குதல் ஏற்படுத்தி வருவதால் சந்தோஷ் அந்நாட்டில் சிக்கி தவிக்கிறார்.
இது தொடர்பாக சந்தோஷ் சுசிர் லாட்டிமரின் தாய் மேகலா கூறியதாவது என்னுடைய மகனுக்கு படிப்பு முடிவதற்கு 3 மாதமே உள்ளது. இந்நிலையில் உக்ரைனில் ரஷியா நடத்திவரும் போரினால் எனது மகன் உள்பட அங்கு தொழிலுக்காக சென்ற இந்தியர்கள் மற்றும் படித்து வரும் மாணவர்கள் உணவின்றி தவித்து வருகின்றனர்.
உக்ரைனில் இருந்து தமிழகம் வருவதற்கு ஒரு நபர்க்கு ரூ.87 ஆயிரம் செலவாகும் என கூறுகிறார். இச்சூழ்நிலையில் எங்களால் பணம் அனுப்புவது என்பது கடினமான காரியம். அச்சமயம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உக்ரைனில் தவிக்கின்ற தமிழக மாணவர்கள் தாயகம் திரும்ப ஆகும் செலவுகளை அரசே ஏற்கும் என அறிவித்ததால் நாங்கள் மிகவும் சந்தோசமாக உள்ளோம்.
இதை அறிவித்தமுதல்வருக்கு அனைத்து பெற்றோர்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம். உக்ரைனில் சிக்கித் தவிக்கும் என் மகன் மட்டுமல்லாமல் எல்லா மாணவர்களையும் மீட்டு பாதுகாத்து அவரவர் பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய-மாநில அரசிடம் வேண்டுகோளாக கேட்கிறோம் என்று மேகலா கூறினார்.