டெல்லியில் நேற்று மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் உயர்மட்டக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில், மத்திய அரசு கடந்த ஆண்டு உத்தரப் பிரதேசம், கர்நாடகா, அஸ்ஸாம் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் பல்வேறு பேரழிவுகளால் ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணமாக ரூ.5,908.56 கோடியை வழங்க ஒப்புதல் அளித்தது.
அதில், அஸ்ஸாமுக்கு ரூ.616.63 கோடி, இமாச்சலப் பிரதேசத்திற்கு ரூ.284.93 கோடி, கர்நாடகாவிற்கு ரூ.1869.85 கோடி, மத்தியப் பிரதேசத்திற்கு ரூ.1749.73 கோடி, மகாராஷ்டிராவுக்கு ரூ.956.93 கோடி, திரிபுராவுக்கு ரூ.63.32, உத்தரப் பிரதேசத்திற்கு ரூ.367.17 கோடி ஒதுக்கீடு செய்ய முடிவுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு முன்பு, மத்திய அரசு கர்நாடகாவிற்கு ரூ.1,200 கோடி, மத்தியப் பிரதேசத்திற்கு ரூ.1000 கோடி, மகாராஷ்டிராவுக்கு ரூ.600 கோடி, பிகாருக்கு ரூ.400 கோடி இடைக்கால நிதி உதவி என நான்கு மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.3,200 கோடி ஏற்கனவே அளித்திருந்த நிலையில், தற்போது கொடுத்துள்ள மொத்த தொகையும் சேர்த்தால் 2019-20ஆம் ஆண்டில் மாநில பேரிடர் மறுமொழி நிதியிலிருந்து (எஸ்.டி.ஆர்.எஃப்.) மத்திய பங்காக 27 மாநிலங்களுக்கு ரூ.8,068.33 கோடியை அரசு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.