Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் செல்போன் திருடும் கும்பல் கைது!

புறநகர் பகுதிகளில் தொடர் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னையில் தாம்பரத்தை அடுத்த சேலையூர் பகுதியில் பாண்டி என்பவர் செல்போன் கடை தொழில் செய்து வருகிறார். வழக்கம்போல் நேற்றிரவு கடையை பூட்டி விட்டுச் சென்ற பாண்டி, இன்று காலை கடையைத் திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு விலை உயர்ந்த 3 செல்போன்கள், மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சேலையூர் காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியபோது, இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட மர்ம நபர்கள் பூட்டை உடைத்து திருடிச் சென்றது தெரியவந்தது.

இந்நிலையில், இரவு வாகனத் தணிக்கையில் சேலையூர் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தபோது, அதிவேகமாக வந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் நிறுத்தாமல் சென்றதால் அவர்களை பின்தொடர்ந்த காவலர்கள், பூண்டிபஜார் அருகே ஒரு வாகனத்தை மட்டும் பிடித்தனர். மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர்.

பிடிபட்ட சேலையூர் பகுதியைச் சேர்ந்த பரத் (20), வினோத்குமார் (20), நரேஷ் குமார் (19), பூந்தமல்லியைச் சேர்ந்த அசோக் (20) ஆகிய நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்ததில், பல நாட்களாகவே புறநகர் பகுதியில் செல்போன்களை திருடி, குறைந்த விலையில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. பின்னர், அவர்களிடமிருந்து மூன்று விலை உயர்ந்த செல்போன்களையும் காவலர்கள் பறிமுதல் செய்தனர். பின்னர், நால்வரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும், தப்பிச் சென்ற மற்ற இருவரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |