சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் (22 கேரட்) விலை நேற்று (ஜன. 06) 512 ரூபாய் உயர்ந்த நிலையில் இன்று 424 ரூபாய் குறைந்து 30 ஆயிரத்து 744 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 53 குறைந்து 3 ஆயிரத்து 843 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளி கிராம் ஒன்றுக்கு ரூ. 1.20 குறைந்து 51 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஈரான் – அமெரிக்கா இடையே பதற்றமான சூழல் நிலவி வருவதால் சர்வதேச சந்தைகளில் நிலையற்ற தன்மை தொடர்ந்து வருகிறது. மத்திய கிழக்கு பகுதிகளில் போர் ஏற்படும் அபாயம் இருந்ததால், பங்குச் சந்தைகளில் உள்ள தங்கள் பங்குகளை தங்கம், கடன் பத்திரம் போன்றவற்றில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்தனர். இதனால் தங்கத்தின் விலை கடும் உயர்வை சந்தித்ததாக பங்குச் சந்தை நிபுணர்கள் கூறினர்.
இந்நிலையில் இந்த பதற்றம் சற்று தனிந்துள்ளதாலும், சர்வதேச சந்தைகள் சீராக இருப்பதாலும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. மேலும், கச்சா எண்ணெய் விலை உயராமல் இருப்பது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்வது ஆகியவையும் இந்த மாற்றத்துக்கு காரணம் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.