காரைக்குடி மருத்துவ மாணவர் பெனடிக் மெட்ரோ சுரங்க பாதையில் கடும் குளிரில் உயிர் பயத்துடன் தங்கியுள்ளார்.
காரைக்குடி ரயில்வே பகுதியில் வசித்து வரும் தமிழ்ச்செல்வி என்பவரின் மகன் பெனடிக் உக்ரைன் நாட்டில் கார்கிவ் என்ற இடத்தில் மருத்துவப் படிப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் பெனடிக் அவர் தாயாரிடம் வாட்ஸ்அப் கால் மூலம் பேசினார். அதில் அவர் கூறியதாவது,ரஷ்யா உக்ரைன் போர் நடைபெற்று வருவதால் இங்கு இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
இரவு முழுவதும் இங்கு -14 டிகிரிக்கு குறைவாக உள்ள கடுங்குளிரில் சுமார் 500 பேர் வரை சுரங்கப்பாதையில் தங்கி இருக்கின்றோம். இரவும் பகலும் பலத்த குண்டு வெடிப்பு சத்தம் கேட்கிறது. இந்த கடும் குளிரில் என்னை போன்ற பல மாணவர்கள் தங்கி உள்ளோம். தூத்துக்குடி உள்ளிட்ட பகுதியில் உள்ள மாணவ மாணவிகள் இந்த கடுங்குளிரில் தங்கி வேதனைப் படுகின்றோம்.
எங்களிடம் போதிய உணவு இல்லை. இதனால் நாங்கள் ஏற்கனவே சேமித்து வைத்திருந்த உணவுகளை வைத்து சாப்பிட்டு வருகின்றோம். வெளியில் உணவு, தண்ணீர் கிடைப்பது அரிதாக உள்ளது. ஏ.டி.எம். மிஷின் சென்று பணம் எடுக்க முடியாத நிலையில் உள்ளோம்.
இங்கிருந்து தங்களது சொந்த நாட்டிற்கு செல்ல வேண்டுமானால் கூட விமான நிலையங்களில் குண்டு வெடிப்பு காரணமாக விமானங்கள் இயக்கப் படவில்லை.இதன் காரணமாக தற்போது சொந்த நாட்டிற்கு கூட செல்ல முடியாத நிலையில் உள்ளோம். எங்களை காப்பாற்றி சொந்த ஊருக்கு வர மத்திய மாநில அரசு உதவ வேண்டும் என்று கூறியுள்ளார்.