மத்திய கல்வி அமைச்சகத்தின் தன்னாட்சி பெற்ற அமைப்பாகவுள்ள கேந்திரிய வித்யாலயா சங்கதன் நிறுவனத்தின் கீழ் நாடு முழுவதும் கே.வி., பள்ளிகள் செயல்படுகின்றன. அதாவது ராணுவத்தினர், மத்திய, மாநில அரசின் அலுவலர், ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனத்தினர் போன்றோரின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை அளித்து இந்த கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். இதையடுத்து மீதமுள்ள இடங்கள் மற்றவர்களுக்கு ஒதுக்கப்படும். இந்த பள்ளிகளில் 1ஆம் வகுப்பில் மாணவர்களை சேர்க்கும் பணி நடக்கும் போது அந்த ஆண்டு மார்ச் 31 அல்லது ஏப்., 1ல், 5 வயது நிறைந்திருக்க வேண்டும் என்ற விதி பல வருடங்களாக இருக்கிறது.
வரும் 2022- 23ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை கேந்திரிய வித்யாலயா சங்கதன் வெளியிட்டு உள்ளது. அதில் 1ம் வகுப்பில் சேரும் மாணவர்கள் புதிய கல்வி கொள்கையின்படி 6 வயதாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. இதில் மாணவர்களுக்கு 6 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டுமா அல்லது 5 வயது முடிந்து 6 வயதில் இருக்க வேண்டுமா என்ற தெளிவு இல்லை. அதுமட்டுமல்லாமல் மாணவர் எந்த ஆண்டில் இருந்து, எந்த வருடத்திற்குள் பிறந்திருக்க வேண்டும் என்ற குறிப்பும், முதல் கட்ட அறிவிப்பில் இடம் பெறவில்லை. முன்னதாக 5 வயது நிறைவடைந்தால் போதும் என்ற நிலையில், 6 வயது நிறைவடைய வேண்டும் என்று திடீரென்று வயது வரம்பை உயர்த்தினால், ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்த ஆண்டு கே.வி., பள்ளிகளில் சேர முடியாத நிலை ஏற்படும்.
ஏற்கனவே தனியார் பள்ளிகளில் அட்மிஷன்’ முடிந்து விட்டதால அங்கும் ‘சீட்’ பெற முடியாது. தமிழக மாணவர்களை பொறுத்தவரையிலும் அரசு பள்ளிகளில் மட்டுமே சேருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இது தொடர்பாக நாளை (பிப்..28) தொடங்க உள்ள ஆன்லைன் பதிவில் கூடுதல் விபரங்களை அறிந்து கொள்ளலாம் என்று கே.வி. தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனிடையில் கேந்திரிய வித்யாலயா மாணவர் சேர்க்கை அறிவிப்பினை kvsangathan.nic.in/ எனும் இணையதளத்திலும், ஆன்லைன் பதிவு விபரங்களை kvsonlineadmission.kvs.gov.in/index.html என்ற இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.