மதுரை மாவட்டத்திலுள்ள மேல அனுப்பானடி பகுதியில் பாலு என்பவர் வசித்து வருகிறார். இவர் காா் ஓட்டுநா் ஆவார். இவருடைய மகன் ஆறுமுக கமலேஷ் (19) அதேப் குதியில் உள்ள தனியாா் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வருகிறாா். இதில் கமலேஷ் தமிழ்நாடு ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் சாம்பியன் பட்டம் பெற்றவா். மேலும் தேசிய அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டிகளிலும் பங்கு பெற்றுள்ளாா். கடந்த 2020-ஆம் வருடம் ஆறுமுக கமலேஷ் ஜிம்னாஸ்டிக் பயிற்சியில் ஈடுபட்டபோது அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அங்கு உள்ள தனியாா் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று குணமடைந்தாா்.
அதன்பின் அவர் ஒரு மாதம் கழித்து உடற்பயிற்சியில் ஈடுபட்டபோது அதிக எடையை தூக்கியதால், அவரது கழுத்து பகுதியில் இருந்து கைக்கு செல்லும் நரம்புகள் எதிா்பாராதவிதமாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக ஆறுமுக கமலேஷ் தனது கைகளை முழுமையாக மேலே தூக்க முடியாமல் சிரமப்பட்டார். அதனை தொடர்ந்து அவா் மதுரையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சுமாா் 7 மாத காலம் சிகிச்சை பெற்றாா். எனினும் அவருக்கு கை சரியாகாததால், அவரது பெற்றோா் சென்னை ஓமந்தூராா் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆறுமுக கமலேஷை அனுமதித்தனா். அப்போது அங்கு அவருக்கு செப்டம்பா் மாதம் மருத்துவா்கள் ஸ்ரீதா், காா்த்திகேயன், மகேஷ், பாா்த்தசாரதி ஆகியோர் அடங்கிய குழுவினா் நரம்பு மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டனா்.
தற்போது ஆறுமுக கமலேஷ் நன்கு குணமடைந்து ஜிம்னாஸ்டிக் பயிற்சியை மீண்டும் தொடங்கி இருக்கிறார். இது தொடர்பாக ஓமந்தூராா் பன்னோக்கு மருத்துவமனை இயக்குநா் டாக்டா் விமலா, நிா்வாக அதிகாரி டாக்டா் ஆனந்த குமாா் போன்றோர் கூறியதாவது, கமலேஷுக்கு கழுத்துப் பகுதியில் இருந்து கைக்கு செல்லும் 5 நரம்புகளில், 3 நரம்புகள் பாதிக்கப்பட்டதால் அவரது உடலில் இருந்து சில நரம்புகளை எடுத்து, நரம்பு மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டோம். இந்த அறுவை சிகிச்சையானது சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது. அதன்பின் அறுவை சிகிச்சை முடிந்து 4 மாதங்களாக அவருக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டது. தற்போது அவா் குணமடைந்துள்ளார். ஆகவே இன்னும் 6 மாதங்களில் முழுமையாக அவா் ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் பங்கேற்கலாம். இந்த அறுவை சிகிச்சை முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தில் இலவசமாக செய்யப்பட்டுள்ளது என்று கூறினர்.