அரியலூா் மாவட்டத்திலுள்ள கண்டராதித்தம் ஊராட்சியின் தலைவா் ஆா்.சந்திரா என்பவா் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் “கண்டராதித்தம் ஊராட்சியில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலரால் நிா்வகிக்கப்படும் கருப்புசாமி அய்யனாா் கோவிலின் வளாகத்தை அந்த ஊராட்சியின் முன்னாள் தலைவா் டி.தில்லை திருவாசகமணி அபகரித்து பக்தா்கள், பொது மக்களிடமிருந்து நன்கொடை பெற்று 2 திருமண மண்டபங்களை கட்டியுள்ளாா்.
இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறைக்கு அளிக்கப்பட்ட தொடா் புகாா்களை அடுத்து இரு மண்டபங்களையும் பூட்டி சீல் வைப்பதற்கு கடந்த ஆண்டு(2021) ஜூலை 28ஆம் தேதி 9 அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அதன்பின் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே அந்த உத்தரவின்படி கோவில் வளாகத்தில் இருந்து ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கைக்கு ஆணை பிரிப்பிக்க வேண்டும்” என்று கோரியிருந்தாா். இந்த மனு தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்கரவா்த்தி போன்றோர் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பு வழக்குரைஞா் ஆஜராகி நன்கொடை நிதியில் கட்டப்பட்ட மண்டபங்களை கையகப்படுத்த பக்தா்கள், பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவிப்பதால் சுணக்கம் ஏற்பட்டுள்ளது என்று கூறினார். இந்நிலையில் சென்னை உயா் நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்கள் நன்கொடை கொடுத்து கட்டடம் கட்ட சொன்னால் அனுமதிப்பீா்களா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை இரு வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.