பூட்டு உடைக்கப்பட்டு வீட்டிலிருந்த நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் பகுதியில் திருக்கருகாவூரில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சிவக்குமார் தனது குடும்பத்தாருடன் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். இவர்கள் வீட்டிற்கு திரும்பி வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சிவக்குமார் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 10 பவுன் தங்க நகைகள் மற்றும் 22 ஆயிரம் பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சிவகுமார் பாபநாசம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களையும் சேகரித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.