தூத்துக்குடி மாவட்டம் பாலதண்டாயுத நகரில் தி.மு.க. கிளை செயலாளர் கண்ணன்(48) வசித்து வந்தார். இவர் டெய்லர் கடை ஒன்றை வைத்து நடத்தி வந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன் வழக்கம்போல் கடையில் இருந்த கண்ணனை அங்கு வந்த 3 பேர் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், பணியில் கவனக்குறைவாக இருந்த காவல்துறையினரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்ணனின் குடும்பத்தினர், உறவினர்கள், வியாபாரிகள் கடையடைப்பு நடத்தி மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து காவல்துறையினர் வழக்கில் தொடர்புடைய ஜெயேந்திரன், 18 வயது வாலிபர் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரையும் தீவிரமாக தேடி வந்தனர். இதனிடையே ஜெயேந்திரன், மற்றும் 18 வயது வாலிபர் ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அதன்பின் தப்பி ஓடிய 17 வயது சிறுவனை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் இன்று(பிப்..27) 17 வயது சிறுவனையும் காவல்துறையினர் கைது செய்து தூத்துக்குடி 2-வது ஜே.எம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இவ்வாறு கைதான 3 பேரும் அளித்துள்ள வாக்குமூலத்தில், “நாங்கள் பாலதண்டாயுதநகர் பகுதியில் பெண்களை கேலி செய்தும், சண்டித்தனம் செய்தும் வந்தோம்.
இதை கண்ணன் அடிக்கடி கண்டித்து வந்ததோடு, நண்பருடன் சேர்ந்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த நாங்கள் அவரை வெட்டி கொலை செய்துவிட்டோம்” என்று தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக காவல்துறையினர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு இருந்தால் கண்ணனின் கொலையை தடுத்திருக்கலாம் என்று பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். அதனை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் சங்கரை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவு பிறப்பித்தார்.