கேபிள் ஆபரேட்டரை வழிமறித்து கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் தா.பேட்டை மாகதேவி கிழக்கு தெருவை சேர்ந்த ராஜா நாமக்கல் மாவட்டத்தில் கேபிள் டி.வி. ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று ராஜா கேபிள் பணம் வசூல் செய்வதற்காக பவித்திரம் புதூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது பவித்திரம் புதூர் தெற்கு வீதியை சேர்ந்த ராஜ்குமார் என்ற வாலிபர் திடீரென ராஜாவை வழிமறித்துள்ளார்.
இதனையடுத்து ராஜாவை ஆபாச வார்த்தைகளில் திட்டியதோடு மட்டுமல்லாமல் ராஜ்குமார் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து தாக்கியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக ராஜாவை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் எருமபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து ராம்குமாரை கைது செய்துள்ளனர்.