சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், சிறுபான்மை மக்களுக்கு நிதியுதவி வழங்குவதாகக் கூறும் அதிமுக, குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
ஸ்டாலினின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உதயகுமார், “குடியுரிமை திருத்தச் சட்டம் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்குகள் நிலுவையில் உள்ளது. பாஜக கூட்டணியில் திமுக அங்கம் வகித்தபோதுதான் குடியுரிமை சட்டத்திற்கான அடித்தளம் போடப்பட்டது. சிறுபான்மை மக்களுடன் மாமன் மச்சானாக பழகி வருகிறோம்.
ஆனால் அதை சிதைக்க எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றன. குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியாவில் உள்ள எந்த இஸ்லாமியருக்கும் பாதிப்பு ஏற்படாது என உறுதியளிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் இதில் இல்லாததைக் கூறி, பிரிவினையை ஏற்படுத்தி கலவரத்தை உண்டாக்க, நாட்டை சீரழிக்க எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றனர்” என அவர் குற்றம்சாட்டினார்.
இதனையடுத்து கேள்வி எழுப்பிய ஸ்டாலின், திமுக அங்கம் வகித்த பாஜக ஆட்சியின்போது இஸ்லாமியர்கள், ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க மாட்டோம் என எந்த திருத்தமும் கொண்டுவரப்படவில்லை. தற்போது இஸ்லாமியர்களையும், ஈழத்தமிழர்களையும் புறக்கணித்திருப்பது ஏன்?
இந்தச் சட்டத்தை ஆதரித்து வாக்களிக்க கட்சிகளின் முதலமைச்சர்கள் கூட தற்போது தங்கள் மாநிலத்தில் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என கூறி வருகின்றனர். அது போன்ற முடிவை அதிமுக எடுக்க ஏன் தயங்குகிறது என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து என்.ஆர்.சி சட்டம் குறித்து பேசிய அமைச்சர் உதயகுமார், அசாம் மாநிலத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் என்.ஆர்.சி சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என உத்தரவு வரவில்லை. அப்படியே ஒரு வேளை உத்தரவு வந்தாலும், தமிழ்நாட்டில் ஒரு இஸ்லாமியருக்கு இதனால் பாதிப்பு ஏற்படுமானால், அவர்களை பாதுகாக்கும் முதல் குரலாக அதிமுகதான் இருக்கும் என்றார்.
குடியுரிமை சட்ட திருத்த விவகாரம் குறித்து ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளிடையே சட்டப்பேரவையில் நடைபெற்ற இந்த நீண்ட விவாதத்தினால் ஒரு வித பரபரப்பு நிலவியது.