தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த 2 ஆண்டுகளாக திறக்கப்படாமல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டது. அதன்பின் மீண்டும் கொரோனா தொற்று தீவிரமடைந்தால் ஜனவரி மாதம் பள்ளிகள் மூடப்பட்டது. இதன் காரணமாக மாணவர்களின் நேரடி கற்றல் முறையானது பாதிக்கப்படுவதாக பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. இது தொடர்பாக ஆலோசித்து பள்ளி-கல்லூரிகள் பிப் 1ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு அனைத்து மாணவர்களுக்கும் விழிப்புணர்வு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது
அதாவது தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தொடக்கக் கல்வி முதல் கல்லூரி வரை மாணவர்களின் பெயரில் தமிழை சேர்ப்பது சிறப்பானது என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆகவே பள்ளி, கல்லுாரி மாணவர்கள் தங்களது பெயரை தமிழில் எழுதும்போது அதன் முன் எழுத்து இனிஷியலையும் தமிழில் எழுதும் நடைமுறையை அன்றாட வாழ்வில் கொண்டு வர வேண்டும். ஏனெனில் நாம் பெயரை தமிழ் மொழியில் எழுதினாலும், இனிஷியலை ஆங்கிலத்தில் தான் எழுதி வருகிறோம்.
இதனை தவிர்க்கும் வகையில் மாணவர்கள் பள்ளியில் சேர அளிக்கும் விண்ணப்பம், வருகை பதிவேடு, பள்ளி, கல்லுாரிகளில் படிப்பை முடித்து பெறும் சான்றிதழ்கள் வரை, அனைத்திலும் தமிழ் முன் எழுத்துடன் வழங்கும் நடைமுறையை செயல்படுத்த வேண்டும். அதனை தொடர்ந்து மாணவர்கள் தங்கள் கையெழுத்துகளை தமிழ் முன் எழுத்துக்களுடன் கையெழுத்திடவும் அறிவுறுத்தப்படுகிறது. ஆகவே பள்ளி கல்வி அலுவலர்கள், அனைத்து வகையான தொடக்க கல்வி அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளிலும் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது..