வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவிதாங்கோடு கிருஷ்ணன் கோவில் பகுதியில் எலக்ட்ரீசியனான விபின் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக விபினின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். மேலும் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான விபினை அவரது தாயார் சுகுமாரி கண்டித்துள்ளார். இந்நிலையில் பெங்களூருவில் வசிக்கும் மகளை பார்ப்பதற்காக சுகுமாரி சென்றுவிட்டார்.
அப்போது வீட்டில் தனியாக இருந்த விபின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் விபின் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.