ஐக்கிய இஸ்லாமிய நடவடிக்கை குழு சார்பில் செவ்வாய்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் தலைவர் அகமத் கான், அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் தலைவரும் ஹைதராபாத் மக்களவை உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி உள்ளிட்ட பல உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
வரும் 30ஆம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் எதிராக மாபெரும் மனித சங்கலி போராட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய ஹைதராபாத் மக்களவை உறுப்பினர் ஓவைசி, மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட ஜனவரி 30ஆம் தேதி முகமது தி லைன் மாவு ஆலைக்கும் பாபு காத்திற்குமிடைய மாபெரும் அமைதிப் போராட்டம் நடைபெறும்.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்பவர்கள் மாபெரும் மனித சங்கலியை அமைக்கவுள்ளனர். இது எந்தவொரு குறிப்பிட்ட கட்சியோ அமைப்போ மட்டும் நடத்தும் போராட்டம் அல்ல. நாட்டின் இறையாண்மையை காக்க அனைவரும் நடத்தும் போராட்டம் என்றார்.
தொடர்ந்து பேசிய ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் தலைவர் அகமத் கான், ஜனவரி 10ஆம் தேதி மதியம் 2 மணிக்கு இந்த அமைதி பேரணி, ஹைதராபாத்தின் எட்கா மிர் ஆலத்தில் தொடங்கி சாஸ்திரி புரத்தில் நிறைவடையும். மாலை ஐந்து மணிக்கு நிறைவடையும் இந்த பேரணியைத் தொடர்ந்து பொது கூட்டம் நடைபெறும்.
இதுமட்டுமின்றி ஜனவரி 25ஆம் தேதி சரித்திர புகழ்பெற்ற சார்மினாரில் போராட்டம் நடைபெறும். சரியாக நள்ளிரவு 12 மணிக்கு நம் நாட்டின் தேசியக் கொடி சார்மினாரில் ஏற்றப்படும் என்றார்.