முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தனது பிறந்த நாளையொட்டி கட்சியினர் நடத்தும் நிகழ்ச்சிகளில் ஆடம்பரம் சிறிதும் தலைகாட்டி விடக்கூடாது என்ற அன்பு கட்டளை ஒன்றை விடுத்துள்ளார்.
தமிழக முதலமைச்சரும் திமுக கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் வருகிற மார்ச் 1ஆம் தேதி தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இதனை அடுத்து கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் அவரது பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடுவதற்கான பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்த நாளையொட்டி கட்சியினர் நடத்தும் எந்த நிகழ்ச்சிகளிலும் ஆடம்பரம் எதுவும் தலைகாட்டி விடக்கூடாது என்று தொண்டர்களுக்கு அன்பு கட்டளை ஒன்றை விடுத்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக அவர் கட்சி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு தமிழக மக்கள் மகத்தான வெற்றியை அளித்து நல்லாட்சிக்கு ஒரு நற்சான்றிதழ் வழங்கி இருக்கிறார்கள். எனவே இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மார்ச் 2-ஆம் தேதி பொறுப்பேற்க உள்ளார்கள், இதனைத் தொடர்ந்து மேயர் மற்றும் துணை மேயர், தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு மார்ச் 4ஆம் தேதியன்று தேர்தல் நடைபெறுகிறது.
இதனையெல்லாம் கருத்தில் கொண்டு மக்கள் தந்த மகத்தான வெற்றிக்கு வலு சேர்க்கும் வகையில், அனைவரும் தவறாமல் தம் பணியை நிறைவேற்ற வேண்டும். இதனைத் தொடர்ந்து என்னுடைய பிறந்த நாளில் நான் உங்களுக்கு அளிக்கும் அன்பு பரிசு அல்லது நன்றி பரிசாக ‘உங்களில் ஒருவன்’ என்ற வரலாற்றுப் புத்தகத்தின் முதல் பாகத்தை இன்று வெளியிடப்பட உள்ள அந்த புத்தகத்தின் வெளியீட்டு விழாவில், இந்தியாவின் இளம் தலைவர் ராகுல் காந்தி எம்.பி கலந்துகொண்டு நூலினை வெளியிடுகிறார்.
அறிஞர் அண்ணா கூறியது போல, திமுகவின் தேவை இன்னும் அரை நூற்றாண்டு காலத்திற்கு இருக்கும் என கழகத்தை ஆரம்பித்த போது அவர் கூறியுள்ளார். அதைப்போல் தமிழகத்தை கடந்து சமூக பயணத்தில் இந்திய ஒன்றியம் முழுவதும் பயணிக்க வேண்டிய நிலை இருக்கிறது. அதனின் முதற்கட்ட முயற்சிதான் அனைத்து இந்திய சமூக நீதி கூட்டமைப்பு ஆகும். எனவே மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அறிவுக்கு வித்தாகும் புத்தகங்களை வழங்குங்கள். மேலும் திமுக கழகத்தில் புதிய உறுப்பினர்களை சேருங்கள் மற்றும் திராவிட மாடல் அரசின் 9 மாத கால சாதனைகளையும் எடுத்துரையுங்கள். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.