நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேனி மாவட்டத்தில் உள்ள 10 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் அதிமுக 7, பாஜக 1, திமுக 2 உறுப்பினர்களைப் பெற்றது. இதன்மூலம் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியை அதிமுக சுலபமாகப் பெற்றது.
ஆனால், ஒன்றிய அளவில் ஆண்டிபட்டி, உத்தமபாளையம், கம்பம் ஆகிய மூன்று ஒன்றியங்களில் தலைவர் பதவிக்கான பெரும்பான்மை உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிமுக பெற்றது.
எஞ்சிய ஐந்து ஒன்றியங்களில், கடமலை-மயிலை, போடி ஆகிய ஒன்றியங்களில் அதிமுக, திமுக சமபலம் பெற்றது. மீதமுள்ள தேனி, பெரியகுளம், சின்னமனூர் ஆகிய மூன்று ஒன்றியங்களில் திமுக அதிகளவில் உறுப்பினர்களைப் பெற்று தலைவர் பதவியைப் பெறுவதில் சிக்கலின்றி அமைந்தது.
இந்நிலையில், மாவட்ட ஊராட்சியை கைப்பற்றியது போல, 8 ஒன்றியங்களையும், கைப்பற்றுவதில் அதிமுக முனைப்புக்காட்டிவந்தது. இதன் ஒருபகுதியாக சின்னமனூர் ஒன்றியத்தில் முதலாவது வார்டில் வெற்றிபெற்ற திமுக ஒன்றிய கவுன்சிலர், அதிமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக கூறப்பட்டுள்ளது.
அதேபோல், பதவியேற்பு முடிந்தவுடன், திமுக உறுப்பினர்களுடன் செல்லாமல் அதிமுகவினருடன் சென்றுவிட்டதாகவும் அவரை கண்டுபிடித்து தருமாறும் திமுகவினர் புகார் தெரிவித்துவருகின்றனர்.
இச்சம்பவம் ஓய்வதற்குள் பெரியகுளம் ஒன்றியத்தில் உள்ள எட்டாவது வார்டு ஜெயமங்கலம் பகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அக்கட்சியின் உறுப்பினர் செல்வம் என்பவர், சென்னையில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார்.
இதன்மூலம் 16 உறுப்பினர்கள் கொண்ட பெரியகுளம் ஒன்றியத்தில் அதிமுகவின் பலம் 7ஆக அதிகரித்துள்ளது. கூட்டணிக் கட்சியான தேமுதிகவிற்கு 1 உறுப்பினர் உள்ளதால் மொத்த ஆதரவு 8ஆக உள்ளது. 8 உறுப்பினர்களைக் கொண்ட திமுகவின் பலம் தற்போது 7ஆக சரிந்துள்ளது. இவர்களில் மேலும் சிலருக்கு அதிமுகவினர் வலைவிரித்துவருவதாகக் கூறப்படுகிறது.
துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் சொந்த ஊர் என்பதால், பெரியகுளம் ஒன்றியத் தலைவர் பதவியைக் கைப்பற்றுவதற்கு அதிமுகவினர் தீவிரமாகச் செயல்பட்டுவருகின்றனர்.
வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ள மறைமுகத் தேர்தலன்று தலைவர், துணைத் தலைவர் பதவிகளைக் கைப்பற்றுவதற்கு ஆளும் கட்சியினர் மேலும் சில உறுப்பினர்களுக்கு வலைவீசிவருகின்றன