ரஷ்யா, உக்ரைனில் தொடர்ந்து மேற்கொண்டு வரும் கடும் போரில் தற்போது வரை குழந்தைகள் 14 பேர் உட்பட 352 மக்கள் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ரஷ்யா, உக்ரைன் மீது தொடர்ந்து 5-வது நாளாக தீவிர தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இரு நாட்டு படையினருக்கும் நடந்த சண்டையில் ரஷ்யாவை சேர்ந்த 4300 வீரர்கள் பலியானதாக உக்ரைன் அரசு தகவல் வெளியிட்டது. இதுபற்றி ரஷ்ய பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளரான இகோர் கொனஷெங்கோவ் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்ததாவது, எங்கள் தரப்பில் உயிர்ப்பலிகள் ஏற்பட்டதுடன் பலருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது.
எனினும், உக்ரைன் நாட்டை விட எங்கள் தரப்பில் பலமடங்கு பாதிப்பு குறைவாக தான் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். எனினும், உயிரிழந்த ரஷ்ய வீரர்களின் எண்ணிக்கை தொடர்பில் எந்த தகவலும் வெளியிடவில்லை.
இந்நிலையில் ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் தற்போது வரை உக்ரைன் நாட்டில் குழந்தைகள் 14 பேர் உட்பட 352 மக்கள் உயிரிழந்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. மேலும் 116 குழந்தைகள் உட்பட 1684 மக்கள் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.