கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். அதன்படி கடந்த வியாழக்கிழமை அன்று உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரைத் தொடங்கிய ரஷ்யா, தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான உக்ரேனியர்கள் தங்கள் நாட்டைவிட்டு அண்டை நாடுகளுக்கு வெளியேறியுள்ளதாக ஐ.நா சபையின் அகதிகளுக்கான கமிஷனர் சபியா தெரிவித்துள்ளார்
இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்வில் இருந்து பொதுமக்கள் சுதந்திரமாக வெளியேறலாம் என்று ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது. ரஷ்யாவின் தாக்குதல் குறைந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்திருந்த நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவது உறுதி செய்யப்படும். உக்ரைனின் வான்வெளியில் பரப்பு எங்களது கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது. பெலாரஸ் நாட்டில் இன்று (பிப்..28) 2:30 மணிக்கு உக்ரைன்-ரஷ்யா குழுவினர் இடையே பேச்சுவார்த்தை தொடங்க இருக்கிறது.