சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அளிக்கப்படும் இழப்பீடு தொகை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் சாலை விபத்துகளில் மரணம் அடைந்தவர்களுக்கு மத்திய அரசு சார்பில் இழப்பீடு தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அளிக்கப்படும் இழப்பீட்டு தொகை தற்போது 8 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி 25 ,000 ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாயாக இழப்பீடு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
இது தொடர்பான அறிவிக்கை கடந்த 25ஆம் தேதி மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டது. அதில் சாலை விபத்தில் பலத்த காயமடைந்தவர்களுக்கு நிவாரணமாக தற்சமயம் வழங்கப்பட்டு வரும் தொகை 12, 500 ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 25,000 ரூபாயிலிருந்து 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டின் மோட்டார் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்கும் திட்டம் வரும் ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இழப்பீடு கேட்டு பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவித் தொகையை குறித்த காலத்திற்கு வழங்கி முடிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சமீபத்திய தகவல் படி கடந்த 2020ஆம் ஆண்டு நாடு முழுவதும்3,66,138 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. அதன் காரணமாக1,31,714 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.