கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களுக்கு இடையே பாயும் நதியான காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவது தொடர்பாக எந்த மாநில அரசாங்கம் முடிவெடுத்தாலும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள 4 மாநில அரசுகளிடம் இருந்து அனுமதி பெற வேண்டும் என்பது விதி. இந்நிலையில் கர்நாடக அரசு மேகதாதுவில் குறுக்கே அணைகட்ட முடிவு செய்துள்ளதாகவும் இதில் தலையிடுவதற்கு தமிழகத்திற்கு எந்த உரிமையும் இல்லை எனவும் கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார். சித்தராமையாவின் இந்த கருத்திற்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடகாவிற்கு இடையில் கடந்த சில நாட்களாக புகைச்சல் இருந்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் தலைவர்கள் பலர் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் கர்நாடக முன்னாள் அமைச்சர் சித்தராமையா மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக பேசுவதற்கு தமிழகத்திற்கு எந்த உரிமையும் இல்லை என பகிரங்கமாக கூறியிருந்தார். சித்தராமையாவின் இந்த கருத்து தமிழகம் முழுவதும் மாபெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
இது தொடர்பாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கர்நாடக முன்னாள் அமைச்சர் சித்தராமையா கர்நாடக அரசு சார்பில் மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக பேசுவதற்கு தமிழகத்தில் யாருக்கும் உரிமை இல்லை என கூறியுள்ளார். இது மிகவும் கண்டனத்துக்குரிய ஒரு கருத்து. மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு சுத்தமாக தண்ணீர் கிடைக்காது. அவ்வாறு இருக்கையில் தமிழக மக்கள் அதை எதிர்க்கத் தான் செய்வார்கள். எனவே கர்நாடக அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று நடக்க வேண்டும்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.