உக்ரைன் நாட்டிலிருந்து தற்போது வரை 1156 இந்திய மக்கள் தங்கள் நாட்டிற்கு திரும்பி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. பீரங்கி மற்றும் ஏவுகணை தாக்குதல்களால் உக்ரைன் திணறி வருகிறது. எனவே, அந்நாட்டு மக்கள் பக்கத்து நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகிறார்கள். மேலும், இந்தியாவை சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காக உக்ரைனில் தங்கியிருந்தனர்.
இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 5000 மாணவ மாணவிகள் உக்ரைன் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில், பொறியியல் மற்றும் மருத்துவக்கல்வி பயின்று வந்தார்கள். போர் காரணமாக அவர்கள் பதுங்கு குழிகள் மற்றும் மெட்ரோ சுரங்கங்களில் மறைந்திருந்தனர். எனவே, மத்திய அரசு உடனடியாக அவர்களை மீட்க முயற்சி மேற்கொண்டது.
அந்நாட்டின் வான் பகுதி அடைக்கப்பட்டது. எனவே, பக்கத்து நாடுகளின் எல்லைப் பகுதிகளுக்கு வரவழைத்து இந்திய மக்களை மீட்பதற்கு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டது. ‘ஆப்ரேஷன் கங்கா’ எனும் பெயரில் இந்த மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதன்படி 5 சிறப்பு விமானங்கள் உக்ரைன் நாட்டிலிருந்து டெல்லி வந்தடைந்திருக்கிறது.
அதில், தற்போதுவரை 1156 இந்தியர்கள் நாடு திரும்பியிருக்கிறார்கள். மேலும் இத்திட்டத்தின் படி, ஹங்கேரியின் தலைநகரான பூடாபெஸ்டில் நகரிலிருந்து இந்திய மக்கள் 240 பேர் ஆறாவது சிறப்பு விமானம் மூலமாக டெல்லி புறப்பட்டுள்ளனர். இன்று மாலையில் அந்த விமானம் டெல்லி சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.