Categories
மாநில செய்திகள்

புதுச்சேரியில் வேலை நிறுத்தம்… இயல்பு வாழ்க்கை பாதிப்பு.!!

மத்திய அரசைக் கண்டித்து பல்வேறு தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள், குடியுரிமை திருத்தச் சட்டம், தொழிலாளர் விரோதப்போக்கு ஆகியவற்றை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இன்று ஈடுபட்டுள்ளன. இதன் ஒருபகுதியாக, புதுச்சேரியிலும் வேலைநிறுத்தப் போராட்டம் காலை 6 மணிமுதல் தொடங்கியுள்ளது. இதனால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகளில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பெட்ரோல் சேமிப்பு நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. நேரு வீதி, காந்தி வீதி, காமராஜர் சாலை, அண்ணா சாலை, பாரதி வீதி ஆகிய பகுதியில் உள்ள தனியார் வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டுள்ளன. அதனால் ஆட்கள் நடமாட்டமின்றி பெரும்பாலான பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

ஆட்டோ, டெம்போ உள்பட கனரக வாகனங்கள் ஓடவில்லை. புதிய, பழைய பேருந்து நிலையங்களிலிருந்து ஒரு சில தனியார் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசுப் பேருந்துகள் காவல் துறை பாதுகாப்புடன் இயக்கப்படுகின்றன. புதுச்சேரி முழுவதும் பாதுகாப்பு கருதி ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |