சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பெட்டி கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கபிஸ்தலம் பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் இருக்கும் கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது சரவணன் என்பவருக்கு சொந்தமான பெட்டிகடையில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சரவணனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.