பெரம்பலூர் நகராட்சி 5-வது வார்டில் வெற்றி பெற்ற தி.மு.க வேட்பாளரை தாக்கிய அ.தி.மு.க தொண்டரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள காந்தி சிலை முன்பாக அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அ.தி.மு.க தொண்டர் ஒருவர் மதன கோபாலபுரம் பகுதியை சேர்ந்த தி.மு.க வெற்றி வேட்பாளரான சேகர் என்பவரது வீட்டு சுவரில் இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பான சுவரொட்டியை ஒட்ட சென்றுள்ளார்.
இதைப்பார்த்த சேகர் சுவரொட்டியை இங்கு ஒட்டக்கூடாது என்று அவரிடம் கூறினார். இதனால் கோபமடைந்த அந்த நபர் சேகரை கீழே தள்ளிவிட்டார். இதனை தட்டிக்கேட்ட சேகரின் தம்பி குமாரையும் கீழே தள்ளி விட்டு அவர் தப்பித்து ஓடி விட்டார். இதனால் காயமடைந்த சேகரும், குமாரும் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி அ.தி.மு.க தொண்டரை தேடி வருகிறது.