மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்திலுள்ள சிறுகனூர் கிராமத்தில் ரவீந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடைக்கு சென்றுவிட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் பாடாலூர் பகுதியில் வைத்து ரவீந்திரனின் மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரவீந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரவீந்திரனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.