ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்துக்கு தானமாக கொடுத்துள்ள பசுக்களின் விவரங்கள் மற்றும் மறுதானம் செய்யப்பட்ட பசுக்களின் விவரங்களை தெரிவிக்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார். அதில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு தானமாக வழங்கபட்டுள்ள பசுக்களை பராமரிக்க 10 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அளித்துள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதியான முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இந்த கோவிலுக்கு தானமாக கொடுக்கப்படும் பசுக்கள் பால் தருவதை நிறுத்திய உடனே, அவை சுய உதவிக் குழுக்களுக்கும், பூசாரிகளுக்கு அறநிலையத்துறை வழங்குவதாகவும் மற்றும் அந்தப் பசுக்கள் அடிமாட்டு விலைக்கு விற்கப் படுவதாகவும் மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனை மறுத்த அறநிலைத்துறை தரப்பினர் மறுதானமாக செய்யப்படும் பசுக்கள் முறையாக பாதுகாப்பது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் மற்றும் பசுக்களின் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் தரப்பினர் கூறியதாவது, தானமாக பெறப்பட்ட பசுக்கள் மற்றும் தானமாக கொடுக்கப்பட்ட பசுக்களின் விவரங்களை பதிவு செய்து பராமரிக்கபடுவதாக கூறியுள்ளனர்.
தற்போது 77 பால் கொடுக்கும் பசுக்கள் கோவிலுக்கு உள்ளேயும் மற்றும் 74 பால் கொடுப்பதை நிறுத்திவிட்ட பசுக்களை, கோவிலிருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் நிலம் ஒதுக்கி பராமரிக்க படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அடிமாட்டுக்கு விற்கப்படுவதாக கூறுவது மிகவும் தவறானது எனவும் அடிக்கடி கால்நடை மருத்துவர்கள் வந்து இந்த பசுக்களை ஆய்வு செய்து வருவதாக கோவில் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அப்போது வழக்கில் குறுக்கிட்ட மனுதாரர், கோவில் பூசாரிகளுக்கு இந்த பசுக்களை பராமரிக்கும் அளவுக்கு போதிய வருமானம் இல்லை என்றுள்ளார்.
இதனை அடுத்து பூசாரிகளுக்கு இந்த பசுக்களை மறுதானம் கொடுப்பதற்கு பதிலாக அவற்றை கோசாலைகளுக்கு அனுப்பலாம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட பசுக்களின் விவரங்கள் மற்றும் மறுதானம் செய்யப்பட்ட பசுக்களின் விவரங்களை தெரிவிக்கும்படி கோவில் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளனர்.