கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். அதன்படி கடந்த வியாழக்கிழமை அன்று உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரைத் தொடங்கிய ரஷ்யா 5-வது நாளாக தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும் உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவில் ரஷ்யா-உக்ரைன் படைகள் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் போரில் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் சிறையில் உள்ள போர் பயிற்சி பெற்ற குற்றவாளிகளை விடுதலை செய்ய உக்ரைன் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இவர்கள் ரஷ்ய படைகளை எதிர்த்து போரிட பயன்படுத்தப்படவுள்ளனர். இந்த முடிவு சரியில்லை என்றாலும் நாட்டை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை நியாயமானது தான் என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.