மகாசிவராத்திரியை முன்னிட்டு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளியங்கிரி மலைக்கோவிலுக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பூண்டி வெள்ளியங்கிரி சிவன் கோயிலுக்கு ஆண்டுதோறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக இன்று முதல் வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்கு பக்தர்கள் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
மலை ஏறுவதற்கு அனுமதி என்று தெரிந்தவுடன் கோவை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவைக்கு வந்த வண்ணம் உள்ளனர். மேலும் மலை ஏறுவதற்கு முன்பு பக்தர்கள் அனைவருக்கும் வனத்துறை சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட வருகிறது.
இங்கு வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ள காரணத்தால் கூட்டமாக செல்ல வேண்டும். யாரும் தனியாக செல்ல வேண்டாம் மற்றும் குப்பைகளை ஆங்காங்கே வீசக் கூடாது என பக்தர்களுக்கு வனத்துறையினர் அறிவித்துள்ளனர். இரண்டு வருடங்களுக்கு பிறகு வெள்ளையங்கிரி மலை பக்தர்களுக்கு அனுமதி கிடைத்துள்ளதால் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.