அதிமுகவை பொறுத்தவரை ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் கட்சியில் பல்வேறு குழப்பங்களும் கூச்சல்களும் நிலவி வந்தன. சசிகலா கட்சியை கைபற்ற எண்ணினார். ஆனால் அவரது எண்ணம் நிறைவேறாத பட்சத்தில் அதிமுகவில் பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்தன. இதனை அடுத்து முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய பதவியை எடப்பாடி பழனிச்சாமிக்கு விட்டுக் கொடுத்தார். அதன்பின்னர் சிலகாலம் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தார். ஆனால் கட்சியை பொறுத்தவரை இரட்டை தலைமை என்ற நிலையே நீடித்து வந்தது. தற்போது வரை அதிமுக இரட்டை தலைமையிலேயே செயல்படுகிறது. ஆனால் தலைமைக்கு இடையில் பல்வேறு உட்கட்சிப் பூசல்கள் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சிறுசிறு புகைச்சல் இருந்து வருவதாகவும் எந்த காரணத்திற்காகவும் விட்டுக் கொடுக்க கூடாது என்பதற்காகவும் தான் இருவரும் இருக்கமாக செயல்பட்டு வருவதாக சில அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு இதுபற்றி பேசியுள்ளார். அப்போது அவர் கட்சித் தலைமை முடிவெடுத்தால் ஒற்றை தலைமையில் இயங்க தொண்டர்கள் தயாராக உள்ளதாக கடம்பூர் ராஜூ கூறினார். இருந்தபோதிலும் இரட்டை தலைமையில் எந்த குழப்பமும் இல்லை என கூறிய அவர் ஒற்றை தலைமை என்பதை காலம்தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் கூறினார். இன்றைக்கு உள்ள சூழலில் அதிமுகவின் தலைமையும் சரி தொண்டர்களும் சரி காலத்திற்கு ஏற்ப செயல்படுவதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.