போதை பொருள் கொடுத்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக 4 வாலிபர்களை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள விருகம்பாக்கத்தில் 13 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமியும் ராமாபுரத்தில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஒரு வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அந்த வாலிபர் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்று போதை பொருள் கொடுத்து அவரை மயக்கமடைய செய்துள்ளார். இதையடுத்து அந்த வாலிபர் தனது நண்பர்கள் 4 பேருடன் இணைந்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சோர்வாக இருந்த சிறுமியிடம் அவரது பெற்றோர் விசாரித்துள்ளனர். அப்போது தனக்கு நடந்தவற்றை சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 4 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.