கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார்.
அதன்படி கடந்த வியாழக்கிழமை அன்று உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரைத் தொடங்கிய ரஷ்யா 5-வது நாளாக தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும் உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவில் ரஷ்யா-உக்ரைன் படைகள் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷ்ய படைகள் சுற்றிவளைக்கிறது. கீவ் நகரை நோக்கி ரஷ்ய படைகளின் கான்வாய் நீண்ட வரிசையில் அணிவகுத்து செல்கிறது. இதன் செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. கீவ் நகரை நோக்கி ரஷ்ய படைகள் விரைவதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.