திருத்தணி முருகன் கோவிலில் 31 நாட்களில்1,12,36,265 ரூபாய் பக்தர்கள் இதுவரை உண்டியல் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படையான திருத்தணி சுப்பிரமணி சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலுக்கு ஆந்திர மாநிலம், கர்நாடக மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினந்தோறும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றார்கள்.
இந்நிலையில் இந்த மாதம் பொங்கல் திருவிழா கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசு கட்டுப்பாடுகள் விதித்து திருக்கோயில்கள் மூடப்பட்டிருந்தது. இதனால் பக்தர்கள் தரிசனத்திற்கு வரவில்லை. தற்போது பொங்கல் விடுமுறைக்கு பின்பு கோயில் திறக்கப்பட்டுள்ளது. அதன்பின் பக்தர்கள் அனைவரும் மூலவர் முருகப் பெருமானை தரிசனம் செய்துவிட்டு காணிக்கையாக உண்டியலில் பணம், நகை ஆகியவற்றை செலுத்தினார்கள்.
இப்படி பக்தர்கள் காணிக்கையாக செலுத்தப்படும் உண்டியல் பணம் மற்றும் திருத்தணி முருகன் கோயில் உடன் இணைந்த 30 உப கோவில்களில் உண்டியல் பணம் அனைத்தையும் எண்ணுவதற்கு தமிழக இந்து அறநிலையத்துறை ஆணையர் அவர்களிடம் அனுமதி பெற்றனர். அதனை தொடர்ந்து திருத்தணி முருகன் கோயில் நிர்வாகம் மலைக்கோவில் வசந்த மண்டபத்தில் ஒரு கோயில் இணை ஆணையர் செயல் அலுவலர் பரஞ்சோதி, உதவி ஆணையர் ரமணி ஆகியோர் முன்னிலையில் திருக்கோயில் பணியாளர்களை கொண்டு உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் பணம்- ரூ.1,12,36,265/, தங்கம்-1035/-கிராம், வெள்ளி-13200/- கிராம் ஆகியவை உண்டியல் காணிக்கையாக 31 நாட்களில் கிடைக்கப்பெற்றது என்று திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.