ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளை மீண்டும் பொருத்தப்படும் என்ற உத்தரவு, ரயில் பயணிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்புகள் தற்போது குறைந்து வரும் நிலையில், ரயில்வே அமைச்சகம் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் மீண்டும் வரவிருப்பதாக கூறியுள்ளது. இந்த முடிவால் சாமானிய மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஹோலி பண்டிகை வரும் நிலையில் அதனை முன்னிட்டு ரயில்வே அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இவ்வாறு வெளியிட்டுள்ள உத்தரவில், கொரோனாவுக்கு முன் இருந்ததுபோல ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் மீண்டும் பொருத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் பழையபடி முன்பதிவு இல்லாமல் பயணிக்க முடியும். எனவே இந்த அறிவிப்பு ரயில் பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஏற்கனவே சில ரயில்களில் முன்பதிவில்லா டிக்கெட் சேவை தொடங்கியிருந்தாலும், தற்போது முழு வீச்சில் தொடங்க உள்ளது.
மேலும் இந்திய ரயில்வே மற்றொரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. அதாவது பனிமூட்டம் காரணமாக 100க்கும் மேற்பட்ட ரயில்கள் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது இயல்பு நிலை திரும்பியதால் அந்த ரயில்கள் மீண்டும் இயக்கப்படுகின்றன. அதன்படி இன்று (மார்ச்1) முதல் உத்தரபிரதேசம் ,பீகார், மத்திய பிரதேசம் ,ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் ரத்து செய்யப்பட்ட பல்வேறு ரயில்கள் மீண்டும் தொடங்கப்படுவதாக முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பு ஹோலிப் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கு வசதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.