தொழிலாளியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனந்தநம்பி குறிச்சி பகுதியில் சின்னத்தம்பி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கருப்பசாமி என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சின்னத்தம்பி குடிபோதையில் வல்லநாடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கருப்பசாமி சென்ற மோட்டார் சைக்கிள் ஒரு கோவிலின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீதும், அங்கு நின்று கொண்டிருந்த உடையார்குளம் பகுதியில் வசிக்கும் தொழிலாளியான சேகர் மீதும் மோதியது.
இதில் ஆத்திரமடைந்த சேகர் மோட்டார் சைக்கிள் மோதியது குறித்து கருப்பசாமியை தட்டி கேட்டுள்ளார். அப்போது கருப்பசாமியும், அங்கிருந்த அவரது நண்பரான வேல்முருகன் என்பவரும் சேர்ந்து சேகரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சேகரை அவதூறாக பேசி இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து சேகர் முறப்பநாடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கருப்பசாமி மற்றும் வேல்முருகன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.