தமிழகத்தில் அரசுத்துறை காலிப் பணியிடங்கள் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் ஆண்டு கால அட்டவணையை வெளியிட்டது. இதையடுத்து முதற்கட்டமாக அதிக தேர்வர்களால் எழுதப்படும் வணிக வரி அதிகாரி, நகராட்சி ஆணையர், உதவிப் பிரிவு அலுவலர், வேளாண்மை துறை, புரோகிராமர், கூட்டுறவு சங்கங்களின் மூத்த ஆய்வாளர் உள்ளிட்ட 33 வகை பதவிகளுக்கான குரூப் 2, 2A தேர்வு தொடர்பான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அந்த வகையில் குரூப் 2, 2ஏ-வில் காலியாகவுள்ள 5,550 பணியிடங்களுகான தேர்வு மே 21ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தற்போது விண்ணப்ப பதிவுகள் நடந்து வரும் நிலையில் மார்ச் 23ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வர்கள் OTR எனப்படும் நிரந்தர கணக்கு வாயிலாக தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் நிரந்தர பதிவு (OTR) வைத்து இருப்பவர்கள் அதனுடன் உங்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு பிப்ரவரி 28ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், பலருக்கு ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
இதனால் தற்போது OTR கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் ஏப்ரல் 30ஆம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது. குரூப்-2 தேர்வு எழுதவுள்ள தேர்வர்கள் மட்டுமே விரைவாக ஆதார் எண்ணை இணைத்து மார்ச் 23ஆம் தேதிக்குள் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டு இந்த டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் நேரம், பாடத்திட்டம் போன்றவை மாற்றப்பட்டுள்ளது.