ரஷ்யா உக்ரேன் பேச்சுவார்த்தை நாளை மீண்டும் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா முழு வீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த போர் எப்போது முடிவுக்கு வரும் என ஒட்டுமொத்த உலகமும் எதிர்பார்ப்பில் உள்ளது. இதற்கிடையில் சர்வதேச சமூகம் போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதனால் ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டது.
இதனை தொடர்ந்து உக்ரைனுக்கு ரஷ்யா பெலாரஸ் நாட்டின் கோமல் நகரில் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தது. உக்ரைன் முதலில் பேச்சுவார்த்தைக்கு இடத்தை மாற்ற வேண்டுமென நிபந்தனை விதித்தது. பின்னர் சம்மதம் தெரிவித்தது. இதனை தொடர்ந்து இரு நாட்டின் பிரதிநிதிகள் குழு பெலாரஸ் நாட்டுக்கு சென்றனர். இந்த நிலையில் நேற்று மாலை இரு நாடுகளுக்கான பேச்சுவார்த்தை 3 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்றது. இந்த சமரச பேச்சுவார்த்தையில் ரஷ்யா உடனடியாக போரை நிறுத்த வேண்டும். மேலும் “தனது படைகளை உக்ரைனில் இருந்து வெளியேறுமாறு ரஷ்யா உத்தரவிட வேண்டும்” என்று உக்ரேன் பிரதிநிதிகள் வலியுறுத்தியதாக தகவல் வெளியானது. இதற்கிடையில் சமரச பேச்சுவார்த்தையின் முடிவில் எந்த ஒரு முடிவும் தெரியவில்லை.
இந்த நிலையில் இன்று ரஷ்ய படையினர் 6-வது நாளாக அரசு கட்டிடங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து ரஷ்ய படைகள் கார்கிவ்வில் உள்ள மத்திய சமூகத்தின் மீது குண்டு மழை பொழிந்து தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த ஒரு மாணவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் பலத்த காயமடைந்து உள்ளார். இதற்கிடையில் ரஷ்யா கீவ் நகரில் உள்ள உளவுத்துறை கட்டிடத்தின் அருகே வசிக்கும் மக்களை வெளியேறுமாறு அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் நாளை மீண்டும் ரஷ்யா உக்ரேன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ரஷ்ய பத்திரிக்கையாளர் நிறுவனம் தெரிவித்துள்ளது.