தமிழகம் முழுதும் பொங்கல் பரிசாக அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரைவில் அறிவிக்க இருக்கிறார் என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.
’ஏன் பள்ளிக் கூடம் போகலையா?’ என்று கிராமத்தில் ஒரு சிறுவனைப் பார்த்து முதல்வர் காமராஜர் கேட்டபோது, ‘பள்ளியோடத்துல கஞ்சி ஊத்துவாங்களா?’ என்று அந்த சிறுவன் காமராஜரைப் பார்த்துக் கேட்டான். அப்போதுதான் பள்ளிக் கூடங்களில் மதிய உணவு போட்டால் மாணவர்கள் அதிக அளவில் படிக்க வருவார்கள் என்ற சிந்தனை விதை காமராஜருக்குள் விழுந்தது. இதுவே மதிய உணவுத் திட்டமானது.
காமராஜரின் மதிய உணவுத் திட்டத்தை மெருகூட்டும் விதத்தில் எம்ஜிஆர் அதை சத்துணவாக மாற்ற, இன்றுவரை அதன் பெயர் சத்துணவுத் திட்டமாகவே நீடித்து வருகிறது. கலைஞர் மதிய உணவில் முட்டை சேர்க்க, ஜெயலலிதா மதிய உணவோடு வாழைப் பழம் சேர்க்க ஒவ்வொரு ஆட்சிக் காலத்திலும் கட்சி பேதமின்றி இந்தத் திட்டம் மேம்படுத்தப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 2019 பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் முயற்சியில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் இத்திட்டத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைத்தார்.
மாநகராட்சிப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் திட்டப்படி காலை உணவாக இட்லி, பொங்கல் உள்ளிட்ட உணவு வகைகள் வழங்கப்பட்டு வந்தன. இத்திட்டம் விரைவில் தமிழக அரசுப் பள்ளிகள் முழுதும் செயல்படுத்தப்பட இருப்பதாக கோட்டை வட்டாரத்தில் இருந்து தகவல்கள் இப்போது கிடைத்துள்ளன.
இதுபற்றி சென்னை மாநகராட்சி, பள்ளிக் கல்வித்துறை, உள்ளாட்சித் துறை வட்டாரங்களில் விசாரித்தோம்.
“கடந்த ஒரு வருடமாக மாநகராட்சிப் பள்ளிகளில் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக சில தொண்டு நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டு, மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் பெரும்பாலும் கூலித் தொழில் செய்பவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் காலை சீக்கிரமே வேலைக்கு செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதனால் பிள்ளைகளுக்கு சமைத்து வைத்து விட்டு போக முடிவதில்லை. இதனால் சாப்பிடாமல் பள்ளி வரும் மாணவர்கள் பசியால் கவனத்தை இழக்கிறார்கள். இரவு உணவுக்கும் காலை உணவுக்கும்தான் இடைவெளி அதிகம். எனவே காலை நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ளவேண்டியது அனைவருக்கும் அவசியம். குறிப்பாக மாணவப் பருவத்தினருக்கு மிகவும் அவசியம்.
இதை உணர்ந்துதான் உள்ளாட்சித் துறை அமைச்சர் மூலம் காலை உணவு திட்டம் மாநகராட்சிப் பள்ளிகளில் தொடங்கப்பட்டது. இதுபோன்று தமிழகத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே இருக்கும் தொண்டு நிறுவனங்கள் மாவட்ட கல்வி அலுவலர்களின் ஒருங்கிணைப்போடு சில அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கி வருகிறார்கள்.
தொண்டு நிறுவனங்களோடு இணைந்து செயல்படும்போது எல்லா பள்ளிகளுக்கும் எல்லா மாணவர்களுக்கும் வழங்கமுடியாத நிலை இருக்கிறது. எனவே இதை அரசே கையிலெடுத்து செய்தால்தான் செம்மையாக முழுமையாக இருக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நீண்ட மாதங்களுக்கு முன்பே கோரிக்கை வைத்திருக்கிறார். நிதிப் பிரச்சினைகளால் இந்த திட்டம் தள்ளிப்போய்க் கொண்டே இருந்த சூழலில் கடந்த சில நாட்களாகவே இதுபற்றிய ஆலோசனை சூடுபிடித்திருக்கிறது.
அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை, மதிய உணவுக்கான செலவு போன்றவை பற்றிய விவரங்கள் முழுமையாக ஆராயப்பட்டது. இதையடுத்து அரசுப் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை பொங்கல் பரிசாக அறிவிக்க முடிவெடுத்துள்ளார் தமிழக முதல்வர்.
இதைக் குறிப்பால் உணர்த்தும் விதமாக, இன்று (ஜனவரி 8) பிற்பகல் தனது ட்விட்டர் பதிவில், “சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு தொடங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வரும் மாணவ மாணவியருக்கு சத்துள்ள சிற்றுண்டி வழங்கும் ‘காலை உணவு திட்டத்தை’ தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளுக்கு விரிவுப்படுத்த தமிழக அரசு பரிசீலித்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி.
கோட்டையின் சில உயரதிகாரிகள் தரப்பில், “ ஏற்கனவே சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் காலை உணவு வழங்குவதற்கு துணைபுரியும் அட்சய பாத்திரம் நிறுவனத்தின் நிர்வாகிகள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அபிமானிகள் என்ற ஒரு தகவலும் உண்டு. அவர்கள் மதிய உணவு திட்டத்தை டேக் ஓவர் செய்ய முற்படுகையில் அதிகாரிகள் தரப்பு கொடுத்த நெருக்கடியால் அது நடக்கவில்லை. அதேநேரம் காலை நேர உணவுத் திட்டத்திலும் அவர்கள் தலையிட வாய்ப்பிருக்கிறது. அரசுத் தரப்போ இதற்கென 900 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருப்பதாகவும், அரசேதான் இதைசெயல்படுத்தப்போவதாகவும் சொல்கிறார்கள். எனவே முதல்வர் இத்திட்டத்தை அறிவிக்கும்போது இதுபற்றிய முழு விவரங்களும் கிடைக்கும்” என்கிறார்கள்.
இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு கிராமப் பகுதிகளில் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்கிறார்கள் ஆசிரியர்களும், மாணவர்களும்.