ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டுமென பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள விசுவக்குடி கிராமத்தில் இந்த விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் அனைவரும் தயாராக இருந்தனர். மேலும் விழா நடக்க வேண்டிய இடமும் சிறப்பாக தயார் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி இல்லை என கூறி அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இதனால் ஏமாற்றம் அடைந்த மாடுபிடி வீரர்கள், விழா கூட்டமைப்பினர் மற்றும் பொதுமக்கள் அரசு பேருந்தை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து வேப்பந்தட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தாசில்தார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன்பிறகு ஜல்லிக்கட்டு நடத்த விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரி உறுதியளித்த பின்னரே அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.