கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார்.
அதன்படி கடந்த வியாழக்கிழமை அன்று உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரைத் தொடங்கிய ரஷ்யா 7-வது நாளாக தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும் உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவில் ரஷ்யா-உக்ரைன் படைகள் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மாஸ்கோவில் உள்ள உக்ரைனிய தூதரகத்தில் சென்று “போர் வேண்டாம்” என்னும் பலகைகளோடு, சில பூக்களை வைத்ததற்காக 2 பெண்களும், அவர்களின் 4 குழந்தைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து உள்ள நிலையில், போர் வேண்டாம் என ரஷ்ய மக்களே பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். 4 குழந்தைகளும், 2 பெண்களும் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.