நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்களின் இறுதிப்பட்டியல் ஒரு வாரத்தில் வெளியிடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி கூறியதாவது, கூட்டுறவு சங்கங்களில் நகை கடன் தள்ளுபடி தகுதியானவர்களின் இறுதிப்பட்டியலானது ஒரு வாரத்தில் வெளியிடப்பட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதையடுத்து அந்தந்த கூட்டுறவு சங்கங்களின் தகவல் பலகையில், பயனாளிகள் அறிந்து கொள்ளும் வகையில், அந்த பட்டியலானது ஒட்டப்படும்.
மேலும் முன்னர் வெளியிட்ட அறிவிப்பின் படி, 2021 ஜனவரி 31ஆம் தேதி வரை உள்ள நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறியுள்ளார். அதன்பின் அந்த நகைகளுக்கு தற்போது வரை செலுத்த வேண்டிய வட்டியை அரசே செலுத்துவதாக முடிவு செய்துள்ளது. இதனால் கூட்டுறவு வங்கிகளில், நகைக் கடனுக்கு தள்ளுபடி செய்ய தகுதியானவர்களிடம் வட்டி செலுத்த, அலுவலர்கள் வலியுறுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.
ஆக மொத்தம் இதுவரை 13 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் நகைக்கடன் தள்ளுபடி செய்ய தகுதியானவர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் இதற்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கக் கூடிய பட்சத்தில் அதை ஆய்வு செய்து அவர்களுக்கான நகை கடனை தள்ளுபடி செய்வது உறுதி என தெரிவித்துள்ளார்.