சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் இந்து மகா சபாவின் மாநில அலுவலகம் இயங்கிவருகிறது. இந்தக் கட்சியின் தலைவராகப் பதவி வகித்துவருபவர் ஸ்ரீகண்டன் (50). அக்கட்சியில் 2016ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயது நிரம்பிய பெண் ஒருவர் மகளிர் பிரிவில் மாநிலச் செயலாளராக இணைந்துள்ளார்.
அதன்பின்னர் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திவந்தார். இச்சூழலில் அக்கட்சியின் தலைவர் ஶ்ரீகண்டனுடன் அப்பெண், கட்சிப் பணிகளுக்காக பல இடங்களுக்குச் சென்றுவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஶ்ரீகண்டனுக்கு மொழி பிரச்னை இருப்பதால், வெளி மாநிலங்களுக்கு செல்லும்போது, இவரையும் உடன் அழைத்துச் சென்றுவந்ததாகவும் தெரிகிறது. அதற்கான தரகுத் தொகையும் இப்பெண்ணுக்கு கொடுப்பதாக ஶ்ரீகண்டன் வாக்குக் கொடுத்துள்ளார்.
ஶ்ரீகண்டனின் பேச்சை நம்பி அவருடன் கட்சிப் பணிகளுக்கு பல இடங்களுக்குச் சென்றுள்ளார். அதனைப் பயன்படுத்திக் கொண்டு தனக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், மேலும் தன்னைத் திருமணம் செய்துகொள்ள ஸ்ரீகண்டன் வற்புறுத்தியதாகவும் அப்பெண் குற்றஞ்சாட்டியிருக்கிறார். தொடர்ந்து கட்சிப் பணிகளிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டார் எனவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தன்னைக் குறித்து குடும்பத்தினரிடம் அவதூறு கருத்துகளைப் பரப்பிவருவதாகப் புகார் தெரிவித்த அப்பெண், தன்னைக் கட்சியில் திரும்ப இணைந்துகொள்ளச் சொல்லி ஶ்ரீகண்டன் கொலைமிரட்டல் விடுப்பதாகவும் கூறி தற்போது கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
மேலும், அப்புகாரில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் இதனால் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்துள்ளார். இந்தப் புகார் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர்.